Saturday, April 24, 2010
விருப்பங்கள் விதவிதமாய்...
மழை பெய்யும் போதினிலே
பறவைக் கூட்டிற் கெல்லாம்
குடைபிடிக்க லாகாதா...
வானம் பார்க்கும் வேளையிலே
பட்டாம் பூச்சி யொன்று
பக்கத்தில் அமராதா...
இலைகளுக் கெல்லாம்
சில செல்லப் பெயர்
இட்டழைக்க லாகாதா...
எங்கள் வீட்டு எறும்புகளின்
வாழ்க்கை சரித்திரம்
வாசிக்கக் கிடைக்காதா...
இலையுதிர்ந்த மரங்களை
இறுகத் தழுவி
ஆறுதல் சொல்லக் கூடாதா...
Sunday, April 18, 2010
காற்றாகி...
மதிய நேரம். அந்த ஓட்டு வீட்டின் கூரையிலுள்ள சிறு ஓட்டைகள் வழியே வெயில் நுழைந்து இருந்தது. அந்த ஒளிக்கற்றைகளால் ஏற்பட்ட ஒளிவில்லைகள் தரையில் வட்டங்களாகவும் நீள்வட்டங்களாகவும் தெரிந்தன. தூசு மிதந்து கொண்டிருந்த அந்த ஒளிக்கற்றைகளையே பார்த்தவாறு, அவன் சுவரில் முதுகு பொருத்தி உட்கார்ந்திருந்தான். அந்த அறையில் அவ்வளவு தூசு உள்ளதென்பதே அவனுக்கு வியப்பை ஏற்படுத்தியது.
காலையில் நிகழ்ந்தவைகளை மீண்டும் அசைபோடத் துவங்கினான். அம்மாவிடம் சண்டையிடுவது ஒன்றும் புதிதல்ல என்றாலும் இன்று கொஞ்சம் அதிகமாகிவிட்டதாக எண்ணினான்.
"கண்ணா, கடைக்குப் போய் இந்த காய்கறி எல்லாம் கொஞ்சம் வாங்கி வந்துடுடா..", என்றாள் அம்மா.
"போமா, உனக்கு வேற வேலையே இல்ல.."
"டேய்.. ஸ்கூல் லீவு விட்டா அம்மாவுக்கு கொஞ்சம் ஒத்தாசை பண்றதுதானே.."
"லீவு விட்டது விளையாடறதுக்குத்தான்.."
"உன்ன யாரு விளையாட வேணாம்னு சொன்னது?.. கடைக்கு போய்ட்டு வந்து விளையாடேன்."
"நீ இப்டிதான் சொல்லுவ.. அப்புறம் இன்னோரு வேலை சொல்லுவ.. அதல்லாம் செய்ய முடியாது போ.."
அம்மாவுக்கு கோபம் வந்தது. முதுகில் இரண்டு அடி வைத்தாள். அழுதான். சமீபத்தில் 'மயிரு' எனும் சொல் திட்டுவதற்கு பரீட்சயம் ஆகியிருந்ததால் "போடீ மயிரு..", என்று சொல்லிவிட்டு வெளியே சென்றுவிட்டான்.
கொஞ்சநேரம் புளியமரத்தடியில் உட்கார்ந்து அழுதுவிட்டு, கண்களை துடைத்துக் கொண்டு விளையாடச் சென்றுவிட்டான். விளையாடி முடித்ததும் நன்றாக பசித்தது. வேறொரு நாளாயிருந்தால் ரோஷத்தோடு மதியம் சாப்பிடாமல் இராத்திரி வீடு சென்றிருப்பான். இன்று யானைப்பசி எடுத்ததால் வீட்டுக்குப் போனான்.
"அம்மா, சாதம் போடும்மா..",என்று சொல்லியபடி அமர்ந்தான்.
"..."
பதிலில்லை. சாப்பாடு மட்டும் அவன் எதிரே வைக்கப்பட்டது.
"தட்டு? டம்ளர்?.."
"..."
அவனே எடுத்து வந்து சாப்பாடு போட்டுக்கொண்டான். சண்டையைத் தானும் தொடர்வதென முடிவு செய்து கொண்டான்.
'எப்படி இருந்தாலும் வீட்டிலுள்ள எல்லோருக்கும் சமையல் செய்யப் போகிறாள் அம்மா. மற்றவற்றை எல்லாம் நாமே பார்த்துக்கொண்டால் போகிறது. இனிமேல் தினமும் 'இதைச்செய், அதைச்செய்' என்ற தொல்லையாவது குறையும். நிம்மதியாக விளையாடப் போகலாம்', என்றெல்லாம் எண்ணிக் கொண்டான்.
மறுநாள் காலையில் அம்மா தம்பியிடம் கடைக்குப் போகச் சொன்னதைக் கேட்டான். தம்பியும் நல்லபிள்ளை மாதிரி உடனே போய்விட்டான். 'ஒருவேளை அவன் எனக்கு விழுந்த அடியைப் பார்த்து இருக்கலாம்' , என்று சமாதானம் செய்து கொண்டான்.
இவ்வாறே பல விஷயங்களிலும் தான் ஒதுக்கப்படுவது கொஞ்சம் கடினமாகத் தானிருந்தது. பல்லைக் கடித்துக் கொண்டு தான் சகஜமாய் இருப்பதாய் காட்டிக் கொண்டான்.
அடுத்த நாள் குளித்துக் கொண்டிருந்த போது, தான் துண்டு எடுத்து வரவில்லை என்பதை உணர்ந்தான்.
"அம்மா! துண்டு..", என்று கிணற்றடியிலிருந்து உரக்க சொல்லினான்.
"...", எப்போதும் போல மௌனம் பதிலாய் வந்தது.
'இது என்னடா..' என்றெண்ணி, தம்பி இருந்த பக்கம் நோக்கி, "டேய் துண்டு எடுத்துக்கிட்டு வாடா..", என்றான். தம்பி அருகில் வந்தான்.
"போடா மயிரு..", என்று சொல்லி திரும்பிப் போய்விட்டான்.
இவனுக்கு கோபம் கோபமாய் வந்தது. கொஞ்ச நேரத்தில் அம்மாவே துண்டை இவன் பக்கமாய் தூக்கிப் போட்டுவிட்டு நகர்ந்தாள். அழுகை வருகிறாற் போல் இருந்தது. தண்ணீரோடு அழுகையையும் துடைத்துக் கொண்டு அறைக்குச் சென்றான்.
அன்று மதியம் நண்பர்களோடு கிணற்றில் நீச்சலடித்துக் கொண்டிருந்தான். தண்ணீருக்குள் அதிகநேரம் மூச்சுப் பிடிப்பவர்கள் யாரென்று ஒரு போட்டி வந்தது. இவனும் மூச்சுப் பிடித்தான். மற்றவர்களைவிட அதிக நேரம் உள்ளேயிருக்க முடிந்தவரை முயன்றான். அப்போது ஏனோ அம்மாவின் முகம் மனத்தில் எழுந்தது. சட்டென்று வெளியே எழுந்தான். வீடு திரும்புகையில் யோசித்துக் கொண்டே சென்றான்.
'அம்மா வந்து காற்று மாதிரி போல... பிடிச்சாலும் பிடிக்கலைனாலும் சுவாசிச்சே ஆகணும். வேணும்னா கொஞ்ச நேரம் மூச்சையடக்கி பார்க்கலாம். ஆனா திரும்ப தானா மூச்சைவிட ஆரம்பிச்சிடுவோம்..', என்று எண்ணினான்.
அம்மாவிடமா 'ஸாரி' கேட்பது. அவனுக்கே ஒரு மாதிரி இருந்தது.
மறுநாள் காலை தண்ணீர் குடிக்க சமையலறையில் நுழைந்தான். அம்மா இவனைக் கவனிக்காதது போல் ஜன்னலை பார்த்தாள்.
"காசு தாம்மா... கடைக்குப் போய் காய்கறி வாங்கிட்டு வரேன்.."
அம்மா புன்னகையோடு அவனை நோக்கினாள்.