Wednesday, February 17, 2010

ஒரு சருகின் சுயசரிதை


நான் இலையாய் இருந்த
நாட்கள் பற்றிப் பேச
இதழ்கள் துடிக்கின்றன

என் கிளை தாங்கிய
பல இலைகளிலே நானும் ஒருவன்
என்னைத் தின்னும் பூச்சிகள்கூட காற்றடித்தால்
என்னைப் பற்றியே நிற்கும்

பக்கத்து இலையைப் பார்த்து
பரவசப் பட்டதுண்டு
நாங்கள் துளிரிலிருந்தே
ஒன்றாய் வளர்ந்தவர்கள்

காற்று வீசிய போதெல்லாம்
நாங்கள் ஒரே திசையில் ஆடினோம்
உதிரும் போதும் ஒன்றாய் உதிர்வோமென
உறுதிமொழி கொண்டோம்

பலம் குறைந்து கிளைமேல்
பற்று குறைந்து
உதிர்ந்தேன் ஒருநாள்

இவ்வளவு நாள் நாங்கள்
சேர்ந்து ஆடிய காற்று
என்னை மட்டும் இன்று
எங்கோ கொண்டு சேர்த்தது

அந்த இலை எப்படி இருக்கிறதோ?
என்னைப் போல் சருகானதோ?
இல்லை இன்னும்
சூரியனைக் காதலிக்கிறதோ?

கேட்டுச் சொல்வாயா காற்றே?


( ** என் பால்ய நண்பன் குமாருக்கு இந்தக் கவிதை சமர்ப்பணம் **)

.

2 comments:

Unknown said...

தோழா....

உன்னுடைய படைப்பு ஒவ்வொன்றிலும் முதிர்ச்சி தெரிகிறது....
நீ தேர்ந்த எழுத்தாழன் ஆகிக்கொண்டிருக்கிறாய் என்பது திட்டவட்டமாக தெரிகிறது....மிக்க மகிழ்ச்சி ...

உன்னுடைய பாலிய நண்பனைப் பற்றி நீ எப்படி நினைக்கின்றாயோ அதை என்னால் இந்த கவிதை படிக்கும் போதே உணர முடிகிறது ... அது உன் கவிதைக்கு கிடைத்த வெற்றி... ....

ஒரு புதிய கோணத்தில் எழுதி இருந்தாய் .... மிக அழகு ....உன்னால், காதல் தவிர பிறவற்றைப் பற்றியும் சிறப்பாக எழுத முடியும் என்று காண்பித்து இருக்கிறாய் ...

"இவ்வளவு நாள் நாங்கள்
சேர்ந்து ஆடிய காற்று"..... இந்த வரி சரி தானா என்ற சிறிய குழப்பம் ..."இவ்வளவு நாள் எங்களை சேர்த்து ஆட்டிய காற்று "....என்று இருந்திருக்கலாமோ என்று தோன்றியது .... தவறாக இருந்தால் என்னை திருத்தவும் ...

எளிய நடையில் இருப்பதால் இது பலருக்கு பிடிக்கும் என்று நினைக்கின்றேன் ....

உன் வளர்ச்சி கண்டு நான் பெருமிதம் கொள்கிறேன் ... வாழ்த்துக்கள்...

கவிதை வட்டாரத்தில் ஒரே சல சலப்பு , ராஜேஷ் இன் அடுத்த வெளியிடு எப்போது என்று... :-) :-) ....

வாழ்த்துக்கள்...

முத்து

Rajesh V said...

நன்றிடா !... எனது அனுபவத்தை எழுத்தின் மூலமாக இன்னொருவருக்கும் ஏற்படுத்த முடியும் என்பதே மகிழ்ச்சி தருகிறது.

"நாங்கள் சேர்ந்து ஆடியிருந்த காற்றானது ...." என்பதே கவித்துவமும் நயமும் கருதி "நாங்கள் சேர்ந்து ஆடிய காற்று .." எனக் கூறப்பட்டது. இது சரியென்றே நான் நினைக்கிறேன்.

Post a Comment