வெள்ளைச் சட்டைகளும் காக்கி பேன்ட்டுகளும் பள்ளியை விட்டு வெளியே வந்து கொண்டிருந்த மாலை நேரம். மழைத்தூறல் விழ ஆரம்பித்தது. நானும் நடக்க ஆரம்பித்தேன்.
சாலையோரத்தில் ஒரு காட்சி காத்திருந்தது. அவள் அமர்ந்திருந்தாள். அவள் எதிரே ஒரு கூடையில் மல்லிகையும் கனகாம்பரமும் நிரம்பி இருந்தன. மழைத்தூறல் அவ்வளவாக அவளுக்கு மகிழ்ச்சி தரவில்லை போலும். அவளிடம் இருந்த குடை பூக்கூடைக்கு மட்டுமே போதுமானதாக இருந்தது. அவளின் பாவாடைச் சட்டையில் தூறல் விழுவதைப் பார்த்தவாறே அவளைக் கடந்தேன். வாழ்வில் முதன்முறையாக 'மழை நிற்கட்டுமே!' என நினைத்தவாறே வீட்டை அடைந்தேன்.
வீடு வந்ததும் என்னுள் எழுந்த கேள்விகள் பல. இவள் இவ்வளவு நாள் இந்த ஊரில் தான் இருந்தாளா?..இவளது கடையை இப்போதுதான் கவனிக்கிறேனா?..யார் இவளோ?...இரவு கடந்தது.
காலையில் பள்ளி செல்லும்போது பார்க்கையில் அவள் வரவில்லை. மாலை வந்தது. அவள் கடையிருந்த பக்கமாய் நடந்தேன். அவள் என்னை ஒரு விநாடி கவனித்தாள். பின் வேறுபுறம் பார்வையை திருப்பிவிட்டாள்.
மறுநாள்--
அப்பாவிடம் பேப்பர் வாங்க வேண்டுமென்று பொய் சொல்லி இரண்டு ரூபாய் வாங்கினேன். மாலைவரை பொறுத்திருந்தேன். பிறகு அவள் முன்சென்று நின்றேன்.
'என்ன வேண்டும்?' என்ற தோரணையில் என்னைப் பார்த்தாள்.
"ஒரு முழம் மல்லி எவ்ளோ?"
"ஒன்றரை ரூபாய்..", எனக் கூறி புன்முறுவலிட்டாள். வயதில் சிறியவர்கள் யாரும் மல்லிகைப்பூ வாங்க வருவதில்லையென்பது நானும் அறிந்ததே. எனினும், இரண்டு
ரூபாயை நீட்டினேன். ஒரு மல்லிச் சரத்தை எடுத்து முழங்கையால் அளந்தாள். ஒரு தாமரை இலையை எடுத்து, மல்லியை வைத்து இலையை ஒரு மடி மடித்து நூலால்
சுற்றி என்னிடம் நீட்டினாள். நான் அவளது கூடையை நோட்டமிட்டுக் கொண்டிருந்தேன்.
அவளிடமிருந்துப் பூவை வாங்கினேன். தன் சட்டைப் பையில் இரண்டு ரூபாயைப் போட்டு எனக்கு மீதத்தைக் கொடுத்தாள். பின் செம்பிலிருந்துச் சிறிது தண்ணீர் எடுத்து பூக்களின்மேல் தெளித்தாள். சில துளிகள் என்மேல் விழ, புனிதம் அடைந்தவனாய் வீடு திரும்பினேன்.
அவளது வாழ்வின் எளிமை என்னை வியக்க வைத்தது. ஒரு நூற்கண்டும் சில தாமரை இலைகளும் பூக்களும் அவளது வாழ்க்கையை நடத்த போதுமானது கண்டு சிலிர்த்தேன். தரையில் ஊற்றிய தண்ணீர் எல்லாப் புறமும் பரவுதல் போல அவளைப் பற்றிய எண்ணங்கள் எல்லா நேரங்களிலும் தோன்ற ஆரம்பித்தன.
சில நாட்களில், நான் வாங்க வேண்டிய எழுதுபொருள்களும் தின்பண்டங்களும் அடிக்கடி மல்லிகைப் பூவாய் மாறின. அதிகமாய்ப் பேசுவதில்லை என்றாலும் அவள் பெயர், குடும்ப நிலை, பொழுதுபோக்கு போன்றவற்றை பேச்சுவாக்கில் கேட்டறிந்தேன்.
ஒருநாள் மாலை மல்லிகைப்பூ வேண்டி அவள்முன்னால் போய் நின்றேன். வழக்கமான புன்னகை வரவேற்றது. பூவை வாங்கிய பின், துணிவெல்லாம் ஒன்று திரட்டி,
"இன்னிக்கு இராத்திரி 8.30 மணிக்கு சிவன் கோயில் குளத்துக் கிட்ட வாயேன்...", என்று கூறி பதில் வாங்காமல் திரும்பி நடந்தேன்.
சிவன் கோயிலுக்கு வெளிப்புறமாக அமைந்த அந்தக் குளம் நான் சிறுவயதிலிருந்தே நன்கு அறிந்தது. முதலை இருக்கிறதென்று எவனோ கட்டிவிட்ட புரளியால் சிறுவர்கள் எவரும் குளத்துக்கு வருவதில்லை. வயதான சிலர் எப்போதேனும் வருவார்கள். நான் மிக முன்னமே வந்து மின்விளக்கு வெளிச்சம் அதிகம் படாத பகுதியாய்ப் பார்த்து அமர்ந்திருந்தேன். ஏறக்குறைய முழுமையாய் இருந்த நிலா கால்பகுதி வானைக் கடந்து கொண்டிருந்தது.
காலம் எனது கழுத்தை முறிக்க முயன்றுக் கொண்டிருந்த போது, கொலுசொலி கேட்டது.
அவள் வந்தாள். ஒரு முழம் இடைவெளி விட்டு நான் உட்கார்ந்திருந்த படிக்கட்டில் அமர்ந்தாள். சில விநாடிகளில் அவள் கேட்டாள்,
"எதுக்குக் கூப்பிட்டே?.."
விடை தெரிந்த வினாக்களுக்கு பதிலென்ன சொல்லுவது....
"இல்ல.. இந்த இடத்துல உன்னோட உட்கார்ந்தா எப்படி இருக்கும்னு தெரிஞ்சுக்கலாமேன்னு..."
அவள் புன்னகைத்தாள். ஒரு நொடி என்னைப் பார்த்துவிட்டு நிலாவைப் பார்த்தாள். ஆஹா! நிலவொளியில் காதலியின் முகம் கண்டோருக்கு மோட்சம் என்று வேதத்தில் ஒருவரி சேர்த்துவிட வேண்டும்.
"நீ அடிக்கடி பூ வாங்கிட்டு போறயே.. அதெல்லாம் என்ன பண்ணுறே?.."
"வீட்டுக்குப் போறதுக்கு முன்னால ஏரிக்கரைக்குப் போவேன்..கொஞ்ச நேரம் பூவ பார்த்துக்கிட்டு இருப்பேன்.. அப்புறம் வாய்க்கால் தண்ணில விட்டுட்டு வந்துடுவேன்.."
அவள் கை இருந்த திசைநோக்கி எனது கை நகர்ந்தது. சிறிது நேரம் தீண்டலை ரசித்துவிட்டு சட்டென்று அவள் கையை விலக்கிக் கொண்டாள்.
நான் பெருமூச்செறிந்தேன்.
"என்ன முணுமுணுப்பு...", என்றாள்.
"இல்ல.. ஒரு கவிதை..", என்றேன்.
"என்ன கவிதை... சொல்லேன்.."
"நிலவொளிக்கு யாரேனும்
குடைபிடிப்பாரோ பெண்ணே!
நீயெந்தன் காதலுக்குத்
தடை சொல்கிறாய்..”
"கவிதை நல்லாயிருக்கு.. மழைத்தூறல் போட்டால் குடை பிடிக்காம போகலாம்.. ஆனால், இங்கே அடைமழையில்ல பெய்யுது.."
நான் நகைக்க அவளும் நகைத்தாள்.
"இங்கே அடிக்கடி வருவியா..", என்றாள்.
"இனிமேல் வரலாம்னு யோசனை..", என்று தூண்டில் போட்டேன்.
"பார்க்கலாம்..", என்று சிரித்தவாறே கூறி எழுந்து போனாள்.
மழை பெய்த பின்பு மண் ஈரமாய் இருத்தல் போல, அவள் போன பின்பு வெகுநேரம் புன்னகைத்துக் கொண்டிருந்தேன்.
எங்கள் சந்திப்புகள் திருவிழாக்களாயின. வாழ்க்கையிலிருந்து வருத்தங்களை யாரோ வடிகட்டி விட்டாற்போல் ஆயிற்று. அவளை மகிழ்ச்சிப் படுத்துவது மிக எளிது. சில தாத்தாப்பூக்களைப் பறித்து ஆசையோடு தந்தால் போதும். குழைந்து விடுவாள்.
சில காலங்கள் கழிந்தன. இருப்பினும் நான் மல்லிகைப்பூ வாங்குவதை நிறுத்தவில்லை. எனக்கு மிகப்பிடித்த கடலைமிட்டாயிடம் மன்னிப்புக் கேட்ட தருணங்கள் உண்டு. அவற்றை சாப்பிட்டே ஓராண்டுக்கு மேல் ஆகியிருக்கும். "மல்லிகைப்பூவாய் நீங்கள் மறுஜென்மம் எடுத்து வாருங்கள்!, உங்களை நான் வாங்குகிறேன்",என்று கூறிவிட்டேன்.
Friday, February 12, 2010
Subscribe to:
Post Comments (Atom)
4 comments:
Story was good..beautiful romantic story but Story can not end this way.. i mean incomplete...
என்ன சொல்லுவது நண்பனே .....
சிறப்பு....மிகசிறப்பு .....
கதை ஆரம்பிக்கும்போது " அட, மீண்டும் ஒரு காதல் கதையா ", என்ற சலிப்பு வந்தது. முடியும் தருவாயில், இவன் இன்னும் கொஞ்சம் எழுதி இருக்கலாம் என்று ஒரு ஏக்கம் .
உனக்கு கதை எழுதுவதில் திறமை உள்ளது , ஆனால் முடிப்பதில் தான் தடுமாறுகின்றாய்.
உரையாடல்கள் நன்றாக இருக்கின்றது , ஆனால் நீ கடலைமிட்டாயிடம் மன்னிப்பு கேட்க்கும் இடம் படு ஜோர் ...
இன்னும் பல இடங்களில் , உன் நகைச்சுவை உணர்வும் , எழுத்து திறமையும் சூரியன் போல பளிச்சிடுகிறது ...வாழ்த்துக்கள் ..
குறைகளை நான் தொலைபேசியில் உன்னிடம் கூறிவிட்டேன் ...
குறைகள் இருந்தால் என்ன...பரவாயில்லை....
மிக சிறப்பு ..... வேறொன்றும் சொல்வதற்கு இல்லை.. நிறைய எழுது .....மீண்டும் வாழ்த்துக்கள் ...
முத்து
Great. Very good story. I like the way u have written.
All the best.
Muthu krishnan
thanks muthukrishnan :)
Post a Comment