Tuesday, December 21, 2010

முதல் இரவு


எனக்கு நினைவு தெரிந்த

முதல் நாள் இரவு அன்று !
நட்சத்திரங்கள் யாவும் மெதுவாய்
நகரக் கண்டேன் மேற்காய்

யாரேனும் அவற்றைக்
கூட்டிச் சென்றுவிடுவார்களோ
எனும் கவலையில் காவலிருந்தேன்

விடிய விடிய விண்ணோடு
மறைந்தன விண்மீன்களெல்லாம்.

நட்சத்திரங்களை தொலைத்தவனின்
நாள் நன்றாக இருக்குமா என்ன?
பகலெல்லாம் தவித்தவாறே
திரிந்தது நினைவிருக்கிறது

இப்போதும் கேட்பேன் இரவுகளில்..
'அன்றைக்கு நீங்கள்
சொல்லிவிட்டு சென்றிருக்கலாம்
மறுநாள் வருவோம் என்று!'

உலரும் காமம்

பாலைவனக் கிழங்குகளில்
சேகரித்த நீரைப் போல - நீ
எப்போதோ சிரித்த சிரிப்பை
எண்ணிப் பார்த்துக் கொள்கிறேன்.

வெறுமையின் வாசம்
வறண்ட காற்றில் கலந்து பரவ..
உன் முலைகளின் மென்மை மறந்து
உலர்கிறது என் காமம்.

Tuesday, September 7, 2010

சில குறுங்கவிதைகள்


உடையப் போவதறியாமல்

வேகமாய் மேலெழும்

நீர்க்குமிழிகள்

அவள் குறித்த என் ஆசைகள்


---------------------------------------------

என்னை முந்திச் செல்பவர்களைப் பற்றி
எனக்கு கவலையேதுமில்லை

நான் ஏற்கெனவே

தவறான பாதையில் செல்கிறேன்

---------------------------------------------

அழத்தோன்றும் தனிமையில்
தூரத்தில் பார்வை நிலையிட
வரிசையிலிருந்து தொலைந்த
எறும்பின் வாடியமுகம்

நினைவினில் வந்தது..

சொல்ல மறந்துவிட்டேனே
என் தனிமைக்கொரு சிறப்புண்டு
அது என்னைத் தவிர

வேறு யாரையும் துன்புறுத்துவதில்லை


---------------------------------------------

நீர்ச்சுழலில் சிக்கிய இலையை
அண்ணாந்து பார்த்ததொரு மீன்
தண்ணீரில் வாழும் மீனுக்கு
தவறி விழுதலைப் பற்றி
தெரிய வாய்ப்பில்லை

Wednesday, May 19, 2010

நகர்தல்

என் மனம்
நத்தையைப் போல
மெதுவாய் நகர்கிறது

தடை வரும்போது
தன்னுள் சுருங்கிக் கொண்டு
பின் மீண்டும் விரிந்து
முன்னோக்கி செல்கிறது

சற்று கவனம்..
நத்தையின் கூடு ஒன்றும்
அவ்வளவு பலமானது அல்ல.

Thursday, May 13, 2010

நீர்வாழ் நட்பு


கிணற்று நீரின்
குளிர்ச்சிக்கு அஞ்சி
கால்களை மட்டும் நனைத்தவாறு
படிக்கட்டில் உட்கார்ந்த வேளை..

பாதத்தின் அசைவுகள் நின்றதால்
ஆபத்தில்லை யென எண்ணி
என் கால் விரல்களில்
முகத்தை மோதின சில மீன்கள்.

நான் நகராமல் இருந்ததற்கு
கால்கள் சுத்தமானது மட்டும்
காரணம் அல்ல..

என் கால்களை முத்தமிடும்
மீன்களையா விலக்குவது?

அந்த மீன்களின் தூரத்து உறவுகள்
இங்கேயும் இருக்கலாம் என்றெண்ணி
என் கல்லூரி நீச்சல் குளத்தில்
நேற்று கால் நனைத்தேன்.

கால்கள் கூசும் படியாய்
ஏதும் நிகழவில்லை
மறுநாள் சற்று கறுத்திருந்தன கால்கள்
குளோரின் படிந்ததாய்க் கூறினார்கள்.


Wednesday, May 12, 2010

தவறான கதவைத் தட்டியவன்


கதவுகள் திறக்கப் படலாம் அல்லது
தாழ்கள் இறுக்கப் படலாம்
எவ்வாறு இருப்பினும்
தட்டுதல் தவிர்க்கப் படலாமோ?

என்றெல்லாம் எண்ணினேன்...

இறுக்கப் பட்ட தாழ்களுக்கு
திறக்கப் படாத கதவுகளை
தேர்ந்தெடுத் திருக்கலாமென தோன்றுகிறதே...

இன்பத்தைக் காட்டிலும்
அமைதியே முக்கியமென
அறியாமற் போனேனே...


Saturday, April 24, 2010

விருப்பங்கள் விதவிதமாய்...


மழை பெய்யும் போதினிலே

பறவைக் கூட்டிற் கெல்லாம்
குடைபிடிக்க லாகாதா...

வானம் பார்க்கும் வேளையிலே
பட்டாம் பூச்சி யொன்று
பக்கத்தில் அமராதா...

இலைகளுக் கெல்லாம்
சில செல்லப் பெயர்
இட்டழைக்க லாகாதா...

எங்கள் வீட்டு எறும்புகளின்
வாழ்க்கை சரித்திரம்
வாசிக்கக் கிடைக்காதா...

இலையுதிர்ந்த மரங்களை
இறுகத் தழுவி
ஆறுதல் சொல்லக் கூடாதா...

Sunday, April 18, 2010

காற்றாகி...

மதிய நேரம். அந்த ஓட்டு வீட்டின் கூரையிலுள்ள சிறு ஓட்டைகள் வழியே வெயில் நுழைந்து இருந்தது. அந்த ஒளிக்கற்றைகளால் ஏற்பட்ட ஒளிவில்லைகள் தரையில் வட்டங்களாகவும் நீள்வட்டங்களாகவும் தெரிந்தன. தூசு மிதந்து கொண்டிருந்த அந்த ஒளிக்கற்றைகளையே பார்த்தவாறு, அவன் சுவரில் முதுகு பொருத்தி உட்கார்ந்திருந்தான். அந்த அறையில் அவ்வளவு தூசு உள்ளதென்பதே அவனுக்கு வியப்பை ஏற்படுத்தியது.

காலையில் நிகழ்ந்தவைகளை மீண்டும் அசைபோடத் துவங்கினான். அம்மாவிடம் சண்டையிடுவது ஒன்றும் புதிதல்ல என்றாலும் இன்று கொஞ்சம் அதிகமாகிவிட்டதாக எண்ணினான்.

"கண்ணா, கடைக்குப் போய் இந்த காய்கறி எல்லாம் கொஞ்சம் வாங்கி வந்துடுடா..", என்றாள் அம்மா.

"போமா, உனக்கு வேற வேலையே இல்ல.."

"டேய்.. ஸ்கூல் லீவு விட்டா அம்மாவுக்கு கொஞ்சம் ஒத்தாசை பண்றதுதானே.."

"லீவு விட்டது விளையாடறதுக்குத்தான்.."

"உன்ன யாரு விளையாட வேணாம்னு சொன்னது?.. கடைக்கு போய்ட்டு வந்து விளையாடேன்."

"நீ இப்டிதான் சொல்லுவ.. அப்புறம் இன்னோரு வேலை சொல்லுவ.. அதல்லாம் செய்ய முடியாது போ.."

அம்மாவுக்கு கோபம் வந்தது. முதுகில் இரண்டு அடி வைத்தாள். அழுதான். சமீபத்தில் 'மயிரு' எனும் சொல் திட்டுவதற்கு பரீட்சயம் ஆகியிருந்ததால் "போடீ மயிரு..", என்று சொல்லிவிட்டு வெளியே சென்றுவிட்டான்.

கொஞ்சநேரம் புளியமரத்தடியில் உட்கார்ந்து அழுதுவிட்டு, கண்களை துடைத்துக் கொண்டு விளையாடச் சென்றுவிட்டான். விளையாடி முடித்ததும் நன்றாக பசித்தது. வேறொரு நாளாயிருந்தால் ரோஷத்தோடு மதியம் சாப்பிடாமல் இராத்திரி வீடு சென்றிருப்பான். இன்று யானைப்பசி எடுத்ததால் வீட்டுக்குப் போனான்.

"அம்மா, சாதம் போடும்மா..",என்று சொல்லியபடி அமர்ந்தான்.

"..."

பதிலில்லை. சாப்பாடு மட்டும் அவன் எதிரே வைக்கப்பட்டது.

"தட்டு? டம்ளர்?.."

"..."

அவனே எடுத்து வந்து சாப்பாடு போட்டுக்கொண்டான். சண்டையைத் தானும் தொடர்வதென முடிவு செய்து கொண்டான்.

'எப்படி இருந்தாலும் வீட்டிலுள்ள எல்லோருக்கும் சமையல் செய்யப் போகிறாள் அம்மா. மற்றவற்றை எல்லாம் நாமே பார்த்துக்கொண்டால் போகிறது. இனிமேல் தினமும் 'இதைச்செய், அதைச்செய்' என்ற தொல்லையாவது குறையும். நிம்மதியாக விளையாடப் போகலாம்', என்றெல்லாம் எண்ணிக் கொண்டான்.

மறுநாள் காலையில் அம்மா தம்பியிடம் கடைக்குப் போகச் சொன்னதைக் கேட்டான். தம்பியும் நல்லபிள்ளை மாதிரி உடனே போய்விட்டான். 'ஒருவேளை அவன் எனக்கு விழுந்த அடியைப் பார்த்து இருக்கலாம்' , என்று சமாதானம் செய்து கொண்டான்.

இவ்வாறே பல விஷயங்களிலும் தான் ஒதுக்கப்படுவது கொஞ்சம் கடினமாகத் தானிருந்தது. பல்லைக் கடித்துக் கொண்டு தான் சகஜமாய் இருப்பதாய் காட்டிக் கொண்டான்.

அடுத்த நாள் குளித்துக் கொண்டிருந்த போது, தான் துண்டு எடுத்து வரவில்லை என்பதை உணர்ந்தான்.

"அம்மா! துண்டு..", என்று கிணற்றடியிலிருந்து உரக்க சொல்லினான்.

"...", எப்போதும் போல மௌனம் பதிலாய் வந்தது.

'இது என்னடா..' என்றெண்ணி, தம்பி இருந்த பக்கம் நோக்கி, "டேய் துண்டு எடுத்துக்கிட்டு வாடா..", என்றான். தம்பி அருகில் வந்தான்.

"போடா மயிரு..", என்று சொல்லி திரும்பிப் போய்விட்டான்.

இவனுக்கு கோபம் கோபமாய் வந்தது. கொஞ்ச நேரத்தில் அம்மாவே துண்டை இவன் பக்கமாய் தூக்கிப் போட்டுவிட்டு நகர்ந்தாள். அழுகை வருகிறாற் போல் இருந்தது. தண்ணீரோடு அழுகையையும் துடைத்துக் கொண்டு அறைக்குச் சென்றான்.

அன்று மதியம் நண்பர்களோடு கிணற்றில் நீச்சலடித்துக் கொண்டிருந்தான். தண்ணீருக்குள் அதிகநேரம் மூச்சுப் பிடிப்பவர்கள் யாரென்று ஒரு போட்டி வந்தது. இவனும் மூச்சுப் பிடித்தான். மற்றவர்களைவிட அதிக நேரம் உள்ளேயிருக்க முடிந்தவரை முயன்றான். அப்போது ஏனோ அம்மாவின் முகம் மனத்தில் எழுந்தது. சட்டென்று வெளியே எழுந்தான். வீடு திரும்புகையில் யோசித்துக் கொண்டே சென்றான்.

'அம்மா வந்து காற்று மாதிரி போல... பிடிச்சாலும் பிடிக்கலைனாலும் சுவாசிச்சே ஆகணும். வேணும்னா கொஞ்ச நேரம் மூச்சையடக்கி பார்க்கலாம். ஆனா திரும்ப தானா மூச்சைவிட ஆரம்பிச்சிடுவோம்..', என்று எண்ணினான்.

அம்மாவிடமா 'ஸாரி' கேட்பது. அவனுக்கே ஒரு மாதிரி இருந்தது.

மறுநாள் காலை தண்ணீர் குடிக்க சமையலறையில் நுழைந்தான். அம்மா இவனைக் கவனிக்காதது போல் ஜன்னலை பார்த்தாள்.

"காசு தாம்மா... கடைக்குப் போய் காய்கறி வாங்கிட்டு வரேன்.."

அம்மா புன்னகையோடு அவனை நோக்கினாள்.

Friday, April 16, 2010

நம்மை மறந்தாரை நாம் மறக்க மாட்டேமால்...


அறுப்பு முடிந்த வயற்காட்டில்
அவள் கைபிடித்து ஓடியபோது
காலில் விழுந்த கீறல்களெல்லாம்
இன்றும் தெரிகின்றன
இன்பத்தின் நினைவுகளாய்....

---------------------------------------

என் நெஞ்சமரத்தின் மேல்
கல்லெறிந்தாள் - ஆங்கே
அமர்ந்திருந்த எண்ணப் பறவைகளெல்லாம்
எங்கோ பறந்தோடிப் போயின..
இப்போது கல்லை மட்டும்
வெறித்து பார்த்தவாறு
நிற்கிறது இந்த மரம்.

--------------------------------------

Monday, March 1, 2010

இரவு


உண்ணும்
போதே
கண்கள் செருகி
உறங்கி விழும்
குழந்தைகள் ஒருபுறம்!

உறக்கம் என்பதன்
உதவி வேண்டாது
தொலைக்காட்சியில் தொலைந்த
முகங்கள் ஒருபுறம்!

வீடுகளின் வெளியே
பாயில் படுத்தோர்
பேச்சொலி காற்றில்
கலந்த தொருபுறம்!

எண்ணக் குழியை
மூட முடியாமல்
விழித்துக் கிடந்த
முதுமைகள் ஒருபுறம்!

எப்போதேனும் வீசும்
காற்றில் அசைந்தாட
காத்துக் கிடந்த
மரங்கள் மறுபுறம்!

நிசப்தத்தின் நடுவே
பூச்சிகள் புடைசூழ
இருளொடு போரிடும்
தெருவிளக்குக ளொருபுறம்!

இவ்வளவு பேரையும்
இழுத்துக் கொண்டு
மெதுவாக நகர்ந்தது
இரவின் இருட்கரம்!

Wednesday, February 17, 2010

எதிர்பார்ப்பு


தேநீரும் பிஸ்கட்டும்

மேலிருந்த மேசையின்
எதிரெதிர் புறமாய்
அவனும் அவளும்

காதல்மொழி பேசிக்
களித்து உண்டிருக்க
அவர்கள் வாயிலிருந்து
வார்த்தைகளைத் தவிர வேறேதும்
உதிராதா வென
எதிர்பார்த்துக் காத்திருந்தது
கீழே அமர்ந்திருந்த நாயொன்று!

காட்சி உபயம்: நேற்றிரவு எங்கள் கல்லூரி வளாகத் தேநீர் விடுதி

ஒரு சருகின் சுயசரிதை


நான் இலையாய் இருந்த
நாட்கள் பற்றிப் பேச
இதழ்கள் துடிக்கின்றன

என் கிளை தாங்கிய
பல இலைகளிலே நானும் ஒருவன்
என்னைத் தின்னும் பூச்சிகள்கூட காற்றடித்தால்
என்னைப் பற்றியே நிற்கும்

பக்கத்து இலையைப் பார்த்து
பரவசப் பட்டதுண்டு
நாங்கள் துளிரிலிருந்தே
ஒன்றாய் வளர்ந்தவர்கள்

காற்று வீசிய போதெல்லாம்
நாங்கள் ஒரே திசையில் ஆடினோம்
உதிரும் போதும் ஒன்றாய் உதிர்வோமென
உறுதிமொழி கொண்டோம்

பலம் குறைந்து கிளைமேல்
பற்று குறைந்து
உதிர்ந்தேன் ஒருநாள்

இவ்வளவு நாள் நாங்கள்
சேர்ந்து ஆடிய காற்று
என்னை மட்டும் இன்று
எங்கோ கொண்டு சேர்த்தது

அந்த இலை எப்படி இருக்கிறதோ?
என்னைப் போல் சருகானதோ?
இல்லை இன்னும்
சூரியனைக் காதலிக்கிறதோ?

கேட்டுச் சொல்வாயா காற்றே?


( ** என் பால்ய நண்பன் குமாருக்கு இந்தக் கவிதை சமர்ப்பணம் **)

.

Friday, February 12, 2010

பூவோடு சேர்ந்த...

வெள்ளைச் சட்டைகளும் காக்கி பேன்ட்டுகளும் பள்ளியை விட்டு வெளியே வந்து கொண்டிருந்த மாலை நேரம். மழைத்தூறல் விழ ஆரம்பித்தது. நானும் நடக்க ஆரம்பித்தேன்.

சாலையோரத்தில் ஒரு காட்சி காத்திருந்தது. அவள் அமர்ந்திருந்தாள். அவள் எதிரே ஒரு கூடையில் மல்லிகையும் கனகாம்பரமும் நிரம்பி இருந்தன. மழைத்தூறல் அவ்வளவாக அவளுக்கு மகிழ்ச்சி தரவில்லை போலும். அவளிடம் இருந்த குடை பூக்கூடைக்கு மட்டுமே போதுமானதாக இருந்தது. அவளின் பாவாடைச் சட்டையில் தூறல் விழுவதைப் பார்த்தவாறே அவளைக் கடந்தேன். வாழ்வில் முதன்முறையாக 'மழை நிற்கட்டுமே!' என நினைத்தவாறே வீட்டை அடைந்தேன்.

வீடு வந்ததும் என்னுள் எழுந்த கேள்விகள் பல. இவள் இவ்வளவு நாள் இந்த ஊரில் தான் இருந்தாளா?..இவளது கடையை இப்போதுதான் கவனிக்கிறேனா?..யார் இவளோ?...இரவு கடந்தது.

காலையில் பள்ளி செல்லும்போது பார்க்கையில் அவள் வரவில்லை. மாலை வந்தது. அவள் கடையிருந்த பக்கமாய் நடந்தேன். அவள் என்னை ஒரு விநாடி கவனித்தாள். பின் வேறுபுறம் பார்வையை திருப்பிவிட்டாள்.

மறுநாள்--
அப்பாவிடம் பேப்பர் வாங்க வேண்டுமென்று பொய் சொல்லி இரண்டு ரூபாய் வாங்கினேன். மாலைவரை பொறுத்திருந்தேன். பிறகு அவள் முன்சென்று நின்றேன்.
'என்ன வேண்டும்?' என்ற தோரணையில் என்னைப் பார்த்தாள்.
"ஒரு முழம் மல்லி எவ்ளோ?"
"ஒன்றரை ரூபாய்..", எனக் கூறி புன்முறுவலிட்டாள். வயதில் சிறியவர்கள் யாரும் மல்லிகைப்பூ வாங்க வருவதில்லையென்பது நானும் அறிந்ததே. எனினும், இரண்டு
ரூபாயை நீட்டினேன். ஒரு மல்லிச் சரத்தை எடுத்து முழங்கையால் அளந்தாள். ஒரு தாமரை இலையை எடுத்து, மல்லியை வைத்து இலையை ஒரு மடி மடித்து நூலால்
சுற்றி என்னிடம் நீட்டினாள். நான் அவளது கூடையை நோட்டமிட்டுக் கொண்டிருந்தேன்.

அவளிடமிருந்துப் பூவை வாங்கினேன். தன் சட்டைப் பையில் இரண்டு ரூபாயைப் போட்டு எனக்கு மீதத்தைக் கொடுத்தாள். பின் செம்பிலிருந்துச் சிறிது தண்ணீர் எடுத்து பூக்களின்மேல் தெளித்தாள். சில துளிகள் என்மேல் விழ, புனிதம் அடைந்தவனாய் வீடு திரும்பினேன்.

அவளது வாழ்வின் எளிமை என்னை வியக்க வைத்தது. ஒரு நூற்கண்டும் சில தாமரை இலைகளும் பூக்களும் அவளது வாழ்க்கையை நடத்த போதுமானது கண்டு சிலிர்த்தேன். தரையில் ஊற்றிய தண்ணீர் எல்லாப் புறமும் பரவுதல் போல அவளைப் பற்றிய எண்ணங்கள் எல்லா நேரங்களிலும் தோன்ற ஆரம்பித்தன.

சில நாட்களில், நான் வாங்க வேண்டிய எழுதுபொருள்களும் தின்பண்டங்களும் அடிக்கடி மல்லிகைப் பூவாய் மாறின. அதிகமாய்ப் பேசுவதில்லை என்றாலும் அவள் பெயர், குடும்ப நிலை, பொழுதுபோக்கு போன்றவற்றை பேச்சுவாக்கில் கேட்டறிந்தேன்.

ஒருநாள் மாலை மல்லிகைப்பூ வேண்டி அவள்முன்னால் போய் நின்றேன். வழக்கமான புன்னகை வரவேற்றது. பூவை வாங்கிய பின், துணிவெல்லாம் ஒன்று திரட்டி,
"இன்னிக்கு இராத்திரி 8.30 மணிக்கு சிவன் கோயில் குளத்துக் கிட்ட வாயேன்...", என்று கூறி பதில் வாங்காமல் திரும்பி நடந்தேன்.

சிவன் கோயிலுக்கு வெளிப்புறமாக அமைந்த அந்தக் குளம் நான் சிறுவயதிலிருந்தே நன்கு அறிந்தது. முதலை இருக்கிறதென்று எவனோ கட்டிவிட்ட புரளியால் சிறுவர்கள் எவரும் குளத்துக்கு வருவதில்லை. வயதான சிலர் எப்போதேனும் வருவார்கள். நான் மிக முன்னமே வந்து மின்விளக்கு வெளிச்சம் அதிகம் படாத பகுதியாய்ப் பார்த்து அமர்ந்திருந்தேன். ஏறக்குறைய முழுமையாய் இருந்த நிலா கால்பகுதி வானைக் கடந்து கொண்டிருந்தது.

காலம் எனது கழுத்தை முறிக்க முயன்றுக் கொண்டிருந்த போது, கொலுசொலி கேட்டது.
அவள் வந்தாள். ஒரு முழம் இடைவெளி விட்டு நான் உட்கார்ந்திருந்த படிக்கட்டில் அமர்ந்தாள். சில விநாடிகளில் அவள் கேட்டாள்,
"எதுக்குக் கூப்பிட்டே?.."
விடை தெரிந்த வினாக்களுக்கு பதிலென்ன சொல்லுவது....
"இல்ல.. இந்த இடத்துல உன்னோட உட்கார்ந்தா எப்படி இருக்கும்னு தெரிஞ்சுக்கலாமேன்னு..."

அவள் புன்னகைத்தாள். ஒரு நொடி என்னைப் பார்த்துவிட்டு நிலாவைப் பார்த்தாள். ஆஹா! நிலவொளியில் காதலியின் முகம் கண்டோருக்கு மோட்சம் என்று வேதத்தில் ஒருவரி சேர்த்துவிட வேண்டும்.

"நீ அடிக்கடி பூ வாங்கிட்டு போறயே.. அதெல்லாம் என்ன பண்ணுறே?.."
"வீட்டுக்குப் போறதுக்கு முன்னால ஏரிக்கரைக்குப் போவேன்..கொஞ்ச நேரம் பூவ பார்த்துக்கிட்டு இருப்பேன்.. அப்புறம் வாய்க்கால் தண்ணில விட்டுட்டு வந்துடுவேன்.."

அவள் கை இருந்த திசைநோக்கி எனது கை நகர்ந்தது. சிறிது நேரம் தீண்டலை ரசித்துவிட்டு சட்டென்று அவள் கையை விலக்கிக் கொண்டாள்.
நான் பெருமூச்செறிந்தேன்.
"என்ன முணுமுணுப்பு...", என்றாள்.
"இல்ல.. ஒரு கவிதை..", என்றேன்.
"என்ன கவிதை... சொல்லேன்.."

"நிலவொளிக்கு யாரேனும்
குடைபிடிப்பாரோ பெண்ணே!
நீயெந்தன் காதலுக்குத்
தடை சொல்கிறாய்..”


"கவிதை நல்லாயிருக்கு.. மழைத்தூறல் போட்டால் குடை பிடிக்காம போகலாம்.. ஆனால், இங்கே அடைமழையில்ல பெய்யுது.."
நான் நகைக்க அவளும் நகைத்தாள்.
"இங்கே அடிக்கடி வருவியா..", என்றாள்.
"இனிமேல் வரலாம்னு யோசனை..", என்று தூண்டில் போட்டேன்.
"பார்க்கலாம்..", என்று சிரித்தவாறே கூறி எழுந்து போனாள்.
மழை பெய்த பின்பு மண் ஈரமாய் இருத்தல் போல, அவள் போன பின்பு வெகுநேரம் புன்னகைத்துக் கொண்டிருந்தேன்.

எங்கள் சந்திப்புகள் திருவிழாக்களாயின. வாழ்க்கையிலிருந்து வருத்தங்களை யாரோ வடிகட்டி விட்டாற்போல் ஆயிற்று. அவளை மகிழ்ச்சிப் படுத்துவது மிக எளிது. சில தாத்தாப்பூக்களைப் பறித்து ஆசையோடு தந்தால் போதும். குழைந்து விடுவாள்.

சில காலங்கள் கழிந்தன. இருப்பினும் நான் மல்லிகைப்பூ வாங்குவதை நிறுத்தவில்லை. எனக்கு மிகப்பிடித்த கடலைமிட்டாயிடம் மன்னிப்புக் கேட்ட தருணங்கள் உண்டு. அவற்றை சாப்பிட்டே ஓராண்டுக்கு மேல் ஆகியிருக்கும். "மல்லிகைப்பூவாய் நீங்கள் மறுஜென்மம் எடுத்து வாருங்கள்!, உங்களை நான் வாங்குகிறேன்",என்று கூறிவிட்டேன்.

Tuesday, February 2, 2010

ஆறாம் அறிவு

உச்சாங் கிளையில
பச்சைக்கிளி ரெண்டு வந்து
உக்காந்து என்ன பேசுது?


"தெக்குந் தெரியல

வடக்குந் தெரியல

இந்தபூமி எங்க போவுது?


பக்கம் பக்கமா

புத்தகத்த போட்டுவிட்டு

என்னாத்த மனுசன் பண்ணுறான்?


பொண்ணக் கெடுத்தவன்

போக்கிரியா திரிஞ்சவன்

நாட்டையே ஆட்சி பண்ணுறான்!


மழையைக் கொடுத்தாலும்
நிழலைக் கொடுத்தாலும்

மரத்தையே மனுசன் வெட்டுறான்!


யானை தன் தலையில
மண்ணை வாரி போட்டதுபோல்

ஓசோனில் ஓட்டை போடுறான்!


இருநூறு கொலை செஞ்ச
எறும்பு உண்டா சொல்லுங்க

மனுசந்தான் மதம் புடிக்கிறான்!


அப்படியே விட்டாலும்
அவனாக செத்திருவான்

இவனுக்கேன் அவசரமோ?


மனுசன் சொன்னா(ன்)ங்க
மடையன் சொன்னா(ன்)ங்க - எவனோ

வெச்சானாம் மனுசனுக்கு ஆறறிவு!"

Saturday, January 9, 2010

நாய்க்குட்டி



பள்ளிக்கூடம் போகும் பசங்களுக்கு வியாழக்கிழமை ஒன்றும் விசித்திரமான நாள் இல்லை. ஆனால் அன்று நானும் குமாரும் ஒரு புது உலகத்தில் இருந்தோம். நேற்று சாயங்காலத்திலிருந்தே இப்படித்தான் இருக்கிறது.

"டேய், எங்க ஊர்ல ஒரு நாய் குட்டி போட்டிருக்குதுடா ! ", ராமகிருஷ்ணன் நேற்று சொன்ன தேவரகசியம் இது.

" நாலு குட்டி போட்டுது. ஆனா, ஒரு குட்டிய ஏற்கனவே பெருமாள் எடுத்துக்கிட்டான்.. நீயும் குமாரும் நாளைக்கி ஸ்கூல் விட்டப்புறம் வந்து எடுத்துக்கோங்கடா.. கண் தொறக்காதப்பவே எடுத்தா தான் நம்மள விட்டு போவாதுனு எங்கம்மா சொல்லிச்சி.."

குமார் அதற்குள் யோசனை செய்ய ஆரம்பித்து விட்டான். "நாய் பெருசா ஆயிட்டா, நம்ம சொல்றது எல்லாம் செய்யும்டா... யார்னா நம்மகிட்ட சண்ட போட்டா, இனிமேட்டு அவ்ளோதான் !! ..."

"காது மடங்கி இருக்கிற நாயா பாத்து எடுங்கடா.. அப்டி இருந்தா தான் அது நல்ல நாய்டா.." , இன்னொரு அனுபவசாலியின் அறிவுரை இது.

இராத்திரி எல்லாம் தூக்கம் வரவேயில்லை. நாய் எப்படி இருக்குதுன்னே ராமகிருஷ்ணனை கேட்கவில்லையே....

ஸ்கூல்ல வேற நேரம் போகமாட்டேங்குது. மரத்தடில எறும்பு விட்டு விளையாடிட்டு இருந்தவனை எல்லாம் விட்டுட்டு நம்மள எழுப்பி கேள்வி கேக்குறார் இந்த வாத்தியார். நம்ம நெனப்பு நாய் மேல இருக்குனு இவருக்கும் தெரிஞ்சிடுச்சா? ! ...

4.30 மணிக்கு பெல் அடிச்சவுடனே நானும் குமாரும் எங்க சைக்கிள்களை விரட்டினோம். 3 மைல் தாண்டி ராமகிருஷ்ணன் ஊர் வந்தது. அவன் எங்களை கூட்டிட்டு போய் நாய்க்குட்டிகளை காண்பித்தான்.

கருப்பு, வெள்ளை, செம்மறி ஆட்டு நிறத்தில் மூன்று குட்டிகளும் எங்களை பார்த்தன. எந்தகுட்டியை எடுப்பதென்றே தெரியவில்லை. எல்லாக் குட்டிக்கும் காது மடங்கி தான் இருந்தது. யோசனை கொடுத்த மடசாம்பிராணியை எண்ணினேன்.

"எனக்கு கருப்புடா..." , குமார் முன்பதிவு செய்துவிட்டான்.

வெள்ளைக் குட்டி எனக்கு பிடித்திருந்தது. "நான் வெள்ளக் குட்டி எடுத்துக்கிறேன்டா.." , என்றேன்.

"டேய், வெள்ளக் குட்டி அடிக்கடி அழுக்காயிடும்டா... தினமும் குளிக்க வெக்கணும்டா....நீ செம்மறி குட்டி எடுத்துக்கோ.. ", என்றான் குமார்.

அவன் சொன்னதும் சரியாய்த்தான் தோன்றியது. செம்மறிக் குட்டியையும் கருப்புக் குட்டியையும் எடுத்துக் கொண்டு இருவரும் சைக்கிள்களை மிதிக்க ஆரம்பித்தோம். வீட்டுக்கு இன்னும் சொல்லவே இல்லை. குமாருக்கு பிரச்சனை இல்லை. அவன் வீட்டில் ஒத்துக் கொள்வார்கள். ஏற்கனவே அவன் வீட்டில் மாடு எல்லாம் இருக்கிறது. அம்மா, அப்பா என்ன சொல்வார்கள் என்று யோசித்துக் கொண்டிருக்கும் போதே வீடு வந்துவிட்டது.

நல்ல வேளையாக அம்மாவுக்கு நாய்க்குட்டியை பிடித்துவிட்டது. அதனாலேயே எனக்கு அம்மாவை இன்னும் அதிகமாக பிடித்துவிட்டது. கொஞ்ச நேரத்தில் நாய்க்குட்டி கத்த ஆரம்பித்தது. அம்மா என்னை பால்புட்டி வாங்கி வர கடைக்கு அனுப்பினாள்.

கடைக்காரன் என்னை மேலும் கீழும் பார்த்தான்.
"உங்க வீட்ல ஏதுடா கொழந்த?.."
"நாய்க்குட்டி வளக்கறோம்...அதுக்குத்தான்..." என்று சொல்லி திரும்பினேன். 'பெருமிதம்' என்பதன் விளக்கத்தை எழுத, தொல்காப்பியர் அப்போது என்னை பார்த்து காப்பி அடித்திருக்கலாம்.

அப்பாவுக்கும் தம்பிக்கும் நாயை அவ்வளவாக பிடிக்கவில்லை என்றாலும் அம்மா என் பக்கம் இருந்ததால் விட்டுவிட்டார்கள். நாய்க்குட்டிக்கு 'மணி' என்று பெயர் வைத்தோம். நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமுமாக வளர்ந்தான் மணி. நாய்க்குட்டி வளர்க்காத பசங்க எல்லாம் எங்களை சுற்றி சுற்றி வந்தார்கள். குட்டிப் பையன்கள் எல்லாம் மணியிடம் கைகொடுக்க ஆசைப்பட்டார்கள். மணி ரொம்ப பெரியவனாகி நான் அவன் முதுகில் உட்கார்ந்து போகின்ற மாதிரியெல்லாம் எனக்கு கனவுகள் வந்தன.

வருடங்கள் சில வந்து போயின. மணியும் பெரியதாக வளர்ந்து விட்டான். ஒரு சனிக் கிழமை நானும் குமாரும் ராமகிருஷ்ணன் ஊருக்கு கிளம்பினோம். கிரிக்கெட் விளையாட மட்டை வெட்டவேண்டும். நாங்கள் மூவரும் ஊருக்கு வெளியே வந்த போது, சற்று தொலைவில் ஒரு நாய் முனகிக் கொண்டே படுத்திருந்தது. அருகில் சென்று பார்த்தோம். அதன் முதுகில் ரணகாயம் இருந்தது. யாரோ அடித்துவிட்டிருக்க வேண்டும்.

இராமகிருஷ்ணன் சொன்னான், "டேய், இந்த நாய் கழிநீர் பானைய கவுத்துடுதுனு எங்க தெருல ஒருத்தன் அடிச்சிட்டான்டா... இதால நடக்கவே முடியாதுனு நெனைக்கறேன்...."

சற்று பழுப்பு பரவியிருந்தாலும், நாயின் உண்மை நிறம் வெள்ளை என உணர்ந்தேன். எண்ணங்கள் என்னை விழுங்க ஆரம்பித்திருக்கும் போதே அவன் மேலும் சொன்னான், "அதான்டா... நீங்க நாய்க்குட்டி எடுத்தப்ப கடைசியா ஒன்னு இருந்துச்சே... அதான் இது...".

என் இதயத்தை யாரோ இடிப்பது போல் இருந்தது. என் முடிவுகளுக்கு இப்படியெல்லாம் விளைவுகள் இருக்கும் எனும் எண்ணமே பயங்கரமாய் தெரிந்தது. உலகத்தின் நாய்க்குட்டிகளை எல்லாம் நானே வளர்க்க வேண்டுமென எண்ணினேன். பின், அந்த எண்ணத்தின் இயலாமை விழிகளின் ஓரத்தில் துளிகளாய் நின்றது.

அந்த நாய் என்னை ஒருமுறை பார்த்துவிட்டு தலையை திருப்பிக் கொண்டது. நான் குமாரைப்பார்த்தேன். அவன் நாயைப் பார்க்க துணிவின்றி திரும்பிக் கொண்டான். நாங்கள் மூவரும் நடக்க ஆரம்பித்தோம். எங்களைச் சுற்றிய வெற்றிடத்தில் மௌனம் பரவியது. எனக்கு திரும்பிப் பார்க்கவே பயமாய் இருந்தது.

ஆம். இப்போதும் எனக்கு திரும்பிப் பார்க்க பயமாய் இருக்கிறது.


Friday, January 8, 2010

நானும் அவளும் !!!


அவள்
தொடுவானம் !
நான் நெருங்கிச் செல்ல
அவள் விலகிச் செல்கிறாள் !

அவள் பூங்காற்று !
அவளைக் கடந்த பின்னும்
வாசம் என் மனதில் ..

அவள் ஒரு பட்டாம்பூச்சி !
மலர்களில் தேன் திரட்டுவதில்லை
மனங்களில் தேன் தெளிக்கிறாள் !

நான் ஒரு கதவு !
வருவோரை உள்ளே விட்டுவிட்டு
நான் வெளியே நிற்கிறேன் !

நான் ஓர் எறும்பு !
மழைக்காலத்திற்கு உணவைப் போல
பிற்காலத்திற்கு எண்ணங்களைச் சேர்க்கிறேன் !

நான் ஒரு பூக்காம்பு !
வண்டுகள் கவனிக்க
வாய்ப்புகள் குறைவு !

நான் ஒரு மாணவன் - ஆனால்
கடைசி நாளில் தேர்வுக்குப் படிப்பது
காதலில் உதவாது !


மாமழை போற்றுதும் !!


அன்றொரு
நாள் மாலை நேரம்--

மரங்களடர்ந்த நிழற்சாலையில் விழுந்த
மலர்களின் மேல் கால்படாமல்
நடந்து கொண்டிருந்தேன்!

மந்தமாய் இருந்த மேகங்களின்
மடியில் இருந்து
மழை பெய்ய லாயிற்று!

என் முன்னால் சென்ற ஒருவர்
தன் பையிலிருந்து எடுத்து விரித்தார்-
எல்லா மேகங்களுக்கும் ஒரு குடை !

அருகிலிருந்த கிளை யொன்றில்
அமர்ந்திருந்தது ஒரு குருவி..

சிறகுகளில் ஈரம் போலும்
பறக்க முடியாமல் பறவை!

அதுதன் சிறகுலர்த்தும் வேளையில் - நான்
கற்ற காற்றியக்கவியல் பற்றி அதன்
காதுகளில் சொல்ல நெருங்கினேன்..

"அதெல்லாம் எனக்குத் தெரியும்" என்பது போல்
சிலிர்த்துக் கொண்டு
சிட்டெனப் பறந்தது!

எனக்குச் செய்த அபிஷேகம்
போதுமென்று-
வருண பகவான் மழையை நிறுத்தினார்.

பின்-
மழையில் நனைந்த மரங்களுக்கு
தலை துவட்டியது காற்று !