பள்ளிக்கூடம் போகும் பசங்களுக்கு வியாழக்கிழமை ஒன்றும் விசித்திரமான நாள் இல்லை. ஆனால் அன்று நானும் குமாரும் ஒரு புது உலகத்தில் இருந்தோம். நேற்று சாயங்காலத்திலிருந்தே இப்படித்தான் இருக்கிறது.
"டேய், எங்க ஊர்ல ஒரு நாய் குட்டி போட்டிருக்குதுடா ! ", ராமகிருஷ்ணன் நேற்று சொன்ன தேவரகசியம் இது.
" நாலு குட்டி போட்டுது. ஆனா, ஒரு குட்டிய ஏற்கனவே பெருமாள் எடுத்துக்கிட்டான்.. நீயும் குமாரும் நாளைக்கி ஸ்கூல் விட்டப்புறம் வந்து எடுத்துக்கோங்கடா.. கண் தொறக்காதப்பவே எடுத்தா தான் நம்மள விட்டு போவாதுனு எங்கம்மா சொல்லிச்சி.."
குமார் அதற்குள் யோசனை செய்ய ஆரம்பித்து விட்டான். "நாய் பெருசா ஆயிட்டா, நம்ம சொல்றது எல்லாம் செய்யும்டா... யார்னா நம்மகிட்ட சண்ட போட்டா, இனிமேட்டு அவ்ளோதான் !! ..."
"காது மடங்கி இருக்கிற நாயா பாத்து எடுங்கடா.. அப்டி இருந்தா தான் அது நல்ல நாய்டா.." , இன்னொரு அனுபவசாலியின் அறிவுரை இது.
இராத்திரி எல்லாம் தூக்கம் வரவேயில்லை. நாய் எப்படி இருக்குதுன்னே ராமகிருஷ்ணனை கேட்கவில்லையே....
ஸ்கூல்ல வேற நேரம் போகமாட்டேங்குது. மரத்தடில எறும்பு விட்டு விளையாடிட்டு இருந்தவனை எல்லாம் விட்டுட்டு நம்மள எழுப்பி கேள்வி கேக்குறார் இந்த வாத்தியார். நம்ம நெனப்பு நாய் மேல இருக்குனு இவருக்கும் தெரிஞ்சிடுச்சா? ! ...
4.30 மணிக்கு பெல் அடிச்சவுடனே நானும் குமாரும் எங்க சைக்கிள்களை விரட்டினோம். 3 மைல் தாண்டி ராமகிருஷ்ணன் ஊர் வந்தது. அவன் எங்களை கூட்டிட்டு போய் நாய்க்குட்டிகளை காண்பித்தான்.
கருப்பு, வெள்ளை, செம்மறி ஆட்டு நிறத்தில் மூன்று குட்டிகளும் எங்களை பார்த்தன. எந்தகுட்டியை எடுப்பதென்றே தெரியவில்லை. எல்லாக் குட்டிக்கும் காது மடங்கி தான் இருந்தது. யோசனை கொடுத்த மடசாம்பிராணியை எண்ணினேன்.
"எனக்கு கருப்புடா..." , குமார் முன்பதிவு செய்துவிட்டான்.
வெள்ளைக் குட்டி எனக்கு பிடித்திருந்தது. "நான் வெள்ளக் குட்டி எடுத்துக்கிறேன்டா.." , என்றேன்.
"டேய், வெள்ளக் குட்டி அடிக்கடி அழுக்காயிடும்டா... தினமும் குளிக்க வெக்கணும்டா....நீ செம்மறி குட்டி எடுத்துக்கோ.. ", என்றான் குமார்.
அவன் சொன்னதும் சரியாய்த்தான் தோன்றியது. செம்மறிக் குட்டியையும் கருப்புக் குட்டியையும் எடுத்துக் கொண்டு இருவரும் சைக்கிள்களை மிதிக்க ஆரம்பித்தோம். வீட்டுக்கு இன்னும் சொல்லவே இல்லை. குமாருக்கு பிரச்சனை இல்லை. அவன் வீட்டில் ஒத்துக் கொள்வார்கள். ஏற்கனவே அவன் வீட்டில் மாடு எல்லாம் இருக்கிறது. அம்மா, அப்பா என்ன சொல்வார்கள் என்று யோசித்துக் கொண்டிருக்கும் போதே வீடு வந்துவிட்டது.
நல்ல வேளையாக அம்மாவுக்கு நாய்க்குட்டியை பிடித்துவிட்டது. அதனாலேயே எனக்கு அம்மாவை இன்னும் அதிகமாக பிடித்துவிட்டது. கொஞ்ச நேரத்தில் நாய்க்குட்டி கத்த ஆரம்பித்தது. அம்மா என்னை பால்புட்டி வாங்கி வர கடைக்கு அனுப்பினாள்.
கடைக்காரன் என்னை மேலும் கீழும் பார்த்தான்.
"உங்க வீட்ல ஏதுடா கொழந்த?.."
"நாய்க்குட்டி வளக்கறோம்...அதுக்குத்தான்..." என்று சொல்லி திரும்பினேன். 'பெருமிதம்' என்பதன் விளக்கத்தை எழுத, தொல்காப்பியர் அப்போது என்னை பார்த்து காப்பி அடித்திருக்கலாம்.
அப்பாவுக்கும் தம்பிக்கும் நாயை அவ்வளவாக பிடிக்கவில்லை என்றாலும் அம்மா என் பக்கம் இருந்ததால் விட்டுவிட்டார்கள். நாய்க்குட்டிக்கு 'மணி' என்று பெயர் வைத்தோம். நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமுமாக வளர்ந்தான் மணி. நாய்க்குட்டி வளர்க்காத பசங்க எல்லாம் எங்களை சுற்றி சுற்றி வந்தார்கள். குட்டிப் பையன்கள் எல்லாம் மணியிடம் கைகொடுக்க ஆசைப்பட்டார்கள். மணி ரொம்ப பெரியவனாகி நான் அவன் முதுகில் உட்கார்ந்து போகின்ற மாதிரியெல்லாம் எனக்கு கனவுகள் வந்தன.
வருடங்கள் சில வந்து போயின. மணியும் பெரியதாக வளர்ந்து விட்டான். ஒரு சனிக் கிழமை நானும் குமாரும் ராமகிருஷ்ணன் ஊருக்கு கிளம்பினோம். கிரிக்கெட் விளையாட மட்டை வெட்டவேண்டும். நாங்கள் மூவரும் ஊருக்கு வெளியே வந்த போது, சற்று தொலைவில் ஒரு நாய் முனகிக் கொண்டே படுத்திருந்தது. அருகில் சென்று பார்த்தோம். அதன் முதுகில் ரணகாயம் இருந்தது. யாரோ அடித்துவிட்டிருக்க வேண்டும்.
இராமகிருஷ்ணன் சொன்னான், "டேய், இந்த நாய் கழிநீர் பானைய கவுத்துடுதுனு எங்க தெருல ஒருத்தன் அடிச்சிட்டான்டா... இதால நடக்கவே முடியாதுனு நெனைக்கறேன்...."
சற்று பழுப்பு பரவியிருந்தாலும், நாயின் உண்மை நிறம் வெள்ளை என உணர்ந்தேன். எண்ணங்கள் என்னை விழுங்க ஆரம்பித்திருக்கும் போதே அவன் மேலும் சொன்னான், "அதான்டா... நீங்க நாய்க்குட்டி எடுத்தப்ப கடைசியா ஒன்னு இருந்துச்சே... அதான் இது...".
என் இதயத்தை யாரோ இடிப்பது போல் இருந்தது. என் முடிவுகளுக்கு இப்படியெல்லாம் விளைவுகள் இருக்கும் எனும் எண்ணமே பயங்கரமாய் தெரிந்தது. உலகத்தின் நாய்க்குட்டிகளை எல்லாம் நானே வளர்க்க வேண்டுமென எண்ணினேன். பின், அந்த எண்ணத்தின் இயலாமை விழிகளின் ஓரத்தில் துளிகளாய் நின்றது.
அந்த நாய் என்னை ஒருமுறை பார்த்துவிட்டு தலையை திருப்பிக் கொண்டது. நான் குமாரைப்பார்த்தேன். அவன் நாயைப் பார்க்க துணிவின்றி திரும்பிக் கொண்டான். நாங்கள் மூவரும் நடக்க ஆரம்பித்தோம். எங்களைச் சுற்றிய வெற்றிடத்தில் மௌனம் பரவியது. எனக்கு திரும்பிப் பார்க்கவே பயமாய் இருந்தது.
ஆம். இப்போதும் எனக்கு திரும்பிப் பார்க்க பயமாய் இருக்கிறது.