என் எண்ணங்களை
யாரேனும்
எடுத்துக் கொள்ளுங்கள்
பிடுங்காமல் விடப்பட்ட
குத்துக்கத்தியின் காயம்
கூடவே வந்து
அசையும் போதெல்லாம்
குருதி கசியும் வேதனை
என்மனம்
அவள்கை ஆயுதமானதில்
வியப்பில்லை
அவளுக்காக எதுவும்
செய்யுமென
அறிந்தே இருந்தேன்
தனியாய்த் தொங்கும் புழுவின்
கேளாக் கதறலென
மீண்டும் கேட்கிறேன்
என் எண்ணங்களை
யாரேனும்...
Tuesday, January 18, 2011
Tuesday, December 21, 2010
முதல் இரவு
எனக்கு நினைவு தெரிந்த
முதல் நாள் இரவு அன்று !
நட்சத்திரங்கள் யாவும் மெதுவாய்
நகரக் கண்டேன் மேற்காய்
யாரேனும் அவற்றைக்
கூட்டிச் சென்றுவிடுவார்களோ
எனும் கவலையில் காவலிருந்தேன்
விடிய விடிய விண்ணோடு
மறைந்தன விண்மீன்களெல்லாம்.
நட்சத்திரங்களை தொலைத்தவனின்
நாள் நன்றாக இருக்குமா என்ன?
பகலெல்லாம் தவித்தவாறே
திரிந்தது நினைவிருக்கிறது
இப்போதும் கேட்பேன் இரவுகளில்..
'அன்றைக்கு நீங்கள்
சொல்லிவிட்டு சென்றிருக்கலாம்
மறுநாள் வருவோம் என்று!'
உலரும் காமம்
பாலைவனக் கிழங்குகளில்
சேகரித்த நீரைப் போல - நீ
எப்போதோ சிரித்த சிரிப்பை
எண்ணிப் பார்த்துக் கொள்கிறேன்.
வெறுமையின் வாசம்
வறண்ட காற்றில் கலந்து பரவ..
உன் முலைகளின் மென்மை மறந்து
உலர்கிறது என் காமம்.
சேகரித்த நீரைப் போல - நீ
எப்போதோ சிரித்த சிரிப்பை
எண்ணிப் பார்த்துக் கொள்கிறேன்.
வெறுமையின் வாசம்
வறண்ட காற்றில் கலந்து பரவ..
உன் முலைகளின் மென்மை மறந்து
உலர்கிறது என் காமம்.
Tuesday, September 7, 2010
சில குறுங்கவிதைகள்
உடையப் போவதறியாமல்
வேகமாய் மேலெழும்
நீர்க்குமிழிகள்
அவள் குறித்த என் ஆசைகள்
---------------------------------------------
என்னை முந்திச் செல்பவர்களைப் பற்றி
எனக்கு கவலையேதுமில்லை
நான் ஏற்கெனவே
தவறான பாதையில் செல்கிறேன்
---------------------------------------------
அழத்தோன்றும் தனிமையில்
தூரத்தில் பார்வை நிலையிட
வரிசையிலிருந்து தொலைந்த
எறும்பின் வாடியமுகம்
நினைவினில் வந்தது..
சொல்ல மறந்துவிட்டேனே
என் தனிமைக்கொரு சிறப்புண்டு
அது என்னைத் தவிர
வேறு யாரையும் துன்புறுத்துவதில்லை
---------------------------------------------
நீர்ச்சுழலில் சிக்கிய இலையை
அண்ணாந்து பார்த்ததொரு மீன்
தண்ணீரில் வாழும் மீனுக்கு
தவறி விழுதலைப் பற்றி
தெரிய வாய்ப்பில்லை
Wednesday, May 19, 2010
Subscribe to:
Posts (Atom)