Wednesday, June 1, 2011

அறி முகம்

என் முகம்
திடீரென மறந்து போய்விட்டது
தெரிந்தவர்களிடம்
விவரிக்குமாறு கேட்டேன்
ஒவ்வொருவரும்
ஒவ்வொரு விதமாய் சொன்னார்கள்
எனக்கெனவோர் முகம் இல்லையோ
என பயந்தபோது அவர் வந்தார்
கேள்விகளையும் வந்த
பதில்களையும் சொன்னேன்
என் கேள்விகளே என் முகமாவதாய்
சொல்லிச் சென்றார்

நலம் புனைந்துரைத்தல்

நீ
துள்ளி குதிப்பது
கொள்ளை அழகுதான்..
இருந்தாலும்
இருநொடிகள் பிரிவுத் துயரம் பூமிக்கு

-----------------------------------------------------
உனது காதலன்
கொடுத்து வைத்தவன்
என்னைப் போல்
கவிதை எழுதிக் கொண்டிருக்காமல்
கவிதையை வாசிப்பான்

----------------------------------------------------
நிறைய பாத்திரங்களில்
மழைநீர் பிடிப்பது போன்றது
உன்னுடன் பேசுதல்.
மேகத்தையே எனக்கு வழங்கிவிடேன்!!

------------------------------------------------------
புதுப் புது கிளிஞ்சல்களை
தோடுகளாக அணிந்துகொள்
உனது கூந்தலின் அலைவுகள்
ஏமாற்றட்டும் என்னை.

------------------------------------------------------
------------------------------------------------------
வேறு

நாம் இருவரும்
ஒரே பட்டாம்பூச்சியை
துரத்துகிறோம்
அது சில சமயம் முட்களிலும்
சில சமயம் பூக்களிலும் அமர்கிறது
இன்பம் பூச்சியிடமோ பூக்களிடமோ இல்லை
ஒன்றாய்த் துரத்துவதில் உள்ளது

-------------------------------------------------------
சில பறவைகள்
தாங்கள் அமரும் மரங்களுக்கு
இறக்கைகளை தந்துவிடுகின்றன
மரமும் பறக்கப் போவதில்லை
பறவையும்...
-------------------------------------------------------

Wednesday, March 2, 2011

மழையில் நனையும் மாடு

திறந்த வெளி -
ஆழமாய்ப் பதித்த இரும்பாணியில்
கட்டிவிட்டு
மேய்ப்பவன் ஒருவன்
மறந்து போனான் மாட்டை

சோ..வெனப் பெய்யும் மழையில்
புல் மேய்வதை மறந்து
இப்படியும் அப்படியுமாய்
தலை கொண்டு இழுத்ததில்
மூக்கணாங்கயிறு உராய
வந்தது இரத்தம்

செய்வதறியாது திகைத்து
இன்னும் இழுக்கிறது
கண்ணுக்கெட்டிய தூரம்வரை
ஒதுங்குமிடம் ஏதுமில்லை
என உணராமல்.

Wednesday, February 9, 2011

முள்


உனது
கூர்மை
சற்று குறைவாய் இருந்திருந்தால்

உன்னைப் பற்றி

எழுதியிருக்க மாட்டேன்


மலரின் பின்புறம்

மறைந்து கொண்டிருக்காவிடில்

உன்னைத் தீண்டியிருக்க மாட்டேன்


இப்போதெல்லாம் மலரைவிட
உன்னையே எனக்கு

அதிகம் பிடிக்கிறது


உனது நோக்கம்
வெளிப்படையானது

வாசமும் வண்ணமும்

அவசியமில்லை அதற்கு


மிக அருகிலிருந்தும்

மலரின் உட்புறம்

அறிய இயலாதவர்கள்
நீயும் நானும் தான்

Tuesday, February 8, 2011

இன்னும் சில


தெய்வங்களே ! உங்களுக்கு

பிடிக்காதவற்றையே
நான் செய்கிறேன்.
பிடித்தவற்றை எல்லாம்
நீங்களே செய்து கொள்ளுங்கள்

----------------------------------------------------------

நிழலுக்காகத்தான் நிற்கிறேன்
இருந்தாலும்
இலைகளின் இடையே
ஒழுகும் வெயிலை
ரசிப்பதாகி விடுகிறது

------------------------------------------------------------

சாலையோரச் செடிகளே
புழுதி படிவதாய்
புகார் கூறவேண்டாம்
பழகிவிடும் உங்களுக்கு

-----------------------------------------------------------

தலையணை யோரம்
சாரையாய் ஊர்ந்து செல்லும்
செவ்வெறும்புகளை சலிக்காமல்
பார்த்துக் கொண்டே இருக்கலாம்
பார்த்துக் கொண்டே இருக்கவும் வேண்டும்